உடல் பருமனால் அவதிப்பட்டுவந்த 'காட்ஜில்லா' குரங்கை மீட்ட வனத்துறையினர்!
தாய்லாந்தில் மிகுந்த உடல் பருமனால் மிகவும் அவதிப்பட்டுவந்த குரங்கை வனத்துறையினர் மீட்டு முகாமிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பாங்காக் நகரிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Min Buri மாவட்டத்தில் ஒரு சந்தையில் வசிக்கும் ஒரு 3 வயது குரங்கு, அப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்தது.
ஏனெனில், அப்பகுதிக்கு வந்து செல்லும் மக்கள் அன்பாக கொடுக்கும் அணைத்து தின்பண்டங்களையும் வாங்கி உட்கொண்டுவந்த அந்த குரங்கு, அதன் இனத்தின் சராசரி எடையை விட இரண்டு மடங்கு அதிகமாக எடையுடன் வளர்ந்துவிட்டது.
குண்டாக இருக்கும் அந்த குரங்கை 'காட்ஜில்லா' என அப்பகுதி மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். அது எப்போதுமே ஒரு தொட்டியின் மேல் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்குமாம்.
இதனால், காட்ஜில்லா 20 கிலோ எடையுடன் நடக்கமுடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அந்தக் குரங்கை வனத்துறையினர் பிடித்து தேசிய பூங்காவிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அங்கு காட்ஜில்லாவுக்கு கட்டுப்பாட்டுடன் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், எடை குறைவதற்கு உடற்பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது. அதன் உடல்நிலை இயல்பு நிலைக்கு வந்ததும் வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

