நான் ஹெலிகொப்டர் நிறைய பணத்துடன் தப்பி செல்லவில்லை... மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் ஆப்கன் அதிபர்
ஆப்கன் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதும், அதன் முன்னாள் அதிபர் ஒரு ஹெலிகொப்டர் நிறைய பணத்துடன் வெளிநாட்டுக்குத் தப்பியதாக ஒரு செய்தி வெளியானது.
சொல்லப்போனால், அவர்169 மில்லியன் டொலர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார், அவர் தனது ஹெலிகொப்டர் நிறைய பணம் மற்றும் நான்கு கார்களை கொண்டு சென்றார் என்றும், அவரது ஹெலிகொப்டரில் இடமில்லாததால் கொஞ்சம் பணத்தை அவர் விட்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த செய்திக்கு ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். தான் ஹெலிகொப்டர் நிறைய பணத்துடன் வெளியேறவில்லை என்றும் தனது விருப்பத்துக்கு மாறாகவே தான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
சூழ்நிலை இரத்தக்களறியாக மாறுவதைத் தவிர்ப்பதற்காகவே தான் காபூலை விட்டு வெளியேறியதாகவும், தற்போது மனிதநேய அடிப்படையில் தனக்கு துபாய் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அஷ்ரஃப் கனி, தான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.