தோண்டத் தோண்ட பெண்களின் சடலங்கள்... முன்னாள் பொலிஸ் அதிகாரி வீட்டில் பிணக்குவியல்
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் ஒரு பொலிஸ் அதிகாரி வீட்டில் 40-கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
எல் சல்வடோர் தலைநகரில் இருந்து சுமார் 78 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சல்சுவாபா நகராட்சி பகுதியிலேயே குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுவரை 24 சடலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய சடலங்களை மீட்க ஒரு மாதகாலம் ஆகலாம் என கூறப்படுகிறது.
இதில் பெரும்பாலும் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் அதிகாரி Hugo Ernesto Osorio Chavez உட்பட 10 பேர்கள் வழக்கை எதிர்கொள்ள நேரிட்டும் என தெரிய வந்துள்ளது.
இதனிடையே, மாயமானதாக கூறப்படும் பலரது உறவினர்கள், சம்பவம் நடந்த பகுதியில் திரண்டு நீதி கேட்டு முழக்கமிட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலங்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதால், பெண்ணுரிமை கேட்டு குரல் எழுப்பியவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், 2020ல் மட்டும் எல் சல்வடோரில் பல்வேறு காரணங்களால் 70 பெண்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், 2019ல் இந்த எண்ணிக்கை 111 என இருந்தது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாலியல் துஷ்பியோகம் தொடர்புடைய கொலைகளாக இருக்க வாய்ப்புள்ளதாகவே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமடைந்து காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.