ரஷ்ய ஜனாதிபதியிடம் கெஞ்சிய பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி: தடுப்பூசி விவகாரத்தில் தடுமாறும் ஐரோப்பிய நாடுகள்
ரஷ்ய தயாரிப்பான Sputnik தடுப்பூசி கேட்டு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நிர்வாகங்கள் ஜனாதிபதி புடினிடம் தொடர்ந்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் ரத்தம் உறைதல் பிரச்சனை எழுந்துள்ளது.
இதனால் பல ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தற்போதைய சூழலில் பொதுமக்களுக்கு அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளார். இருப்பினும், அதே தடுப்பூசியை தாம் எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதனிடையே, மெர்க்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஆகிய இருவரும் தடுப்பூசி விவகாரத்தில் ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளதாகவும், இருவரும் வீடியோ அழைப்பு மூலம் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் கலந்தாலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 31 பேர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஜேர்மனியில் கண்டறியப்பட்ட நிலையிலேயே, சேன்ஸலர் மெர்க்கல் ரஷ்ய தயாரிப்பான கொரோனா தடுப்பூசி தொடர்பில் புடினுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஜேர்மனியில் ரத்தம் உறைதல் பிரச்சனையானது பெண்களுக்கே அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே கனடாவிலும் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அளிப்பதை படிப்படியாக குறைத்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது, மேலும், பிரான்ஸ் இதுவரை இளைஞர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அளிக்க அனுமதி வழங்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவே தெரிய வந்துள்ளது.