காபூலில் 'பாதுகாப்பு மண்டலம்' அமைக்கவேண்டும் - ஐ.நா.விடம் பிரான்ஸ், பிரித்தானியா கோரிக்கை
காபூலில் 'பாதுகாப்பு மண்டலம்' அமைக்க ஐ.நா.விடம் திங்களன்று கோரிக்கை வைக்கவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கும் பாதுகாப்பு மண்டலத்தை (Safe Zone) அமைக்க பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இணைத்து இந்த கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இராக்கில் உள்ள மக்ரோன், இன்று பாக்தாத்தில் நடந்த செய்தி மாநாட்டில் பேசியபோது இதனை தெரிவித்தார்.
இந்த பாதுகாப்பு மண்டலத்தை அமைப்பது, தாலிபான்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச சமூகத்தை பொறுப்புக்கூற வைக்கும் என்று அவர் கூறினார். இந்நிலையில், விரைவில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், தாலிபான்கள் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன் பிரான்ஸ் தொடர்ந்து வெளியேற்றம் குறித்து பேசுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், ஆப்கானிஸ்தானில் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான கூட்டு சந்திப்பை ஏற்பாடு செய்துவருவதாக கூறியுள்ளார்.