ஆப்கானிஸ்தானில் இருந்து 570 பேரை வெளியேற்றிய பிரான்ஸ்!
திங்கள்கிழமை முதல் காபூலில் இருந்து குறைந்தது 407 ஆப்கானிஸ்தான் குடிமக்கள் உட்பட 570 பேரை வெளியேற்றியதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பாரிஸில் நான்காவது ஆப்கானிஸ்தான் மீட்பு விமானம் வெள்ளிக்கிழமை மாலை தரையிறங்கியது.
அதில், 4 பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் 99 ஆப்கானியர்கள் இருந்ததாகவும், அதில் பெரும்பாலும் பிரெஞ்சு அரசு அல்லது ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு குழுக்களுடன் பணிபுரிந்தவர்கள் என தெரிவித்துள்ளது.
இதன்முலம், திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காபூலில் இருந்து குறைந்தது 407 ஆப்கானிஸ்தான் குடிமக்கள் உட்பட மொத்தம் 570 பேரை வெளியேற்றியதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
அரசு சேவைகள் மற்றும் காபூல் விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள பிரெஞ்சு தூதரகம், "புதிய விமானங்களை சீக்கிரம் உறுதி செய்ய முழுமையாகத் திரட்டப்பட்டுள்ளன" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்களன்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், "பிரான்ஸ் நாட்டுக்காக உழைத்த ஆப்கானிஸ்தான் மக்கள் கைவிடப்படமாட்டார்கள் என்றும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அச்சுறுத்தலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் பிறரைப் பாதுகாக்கவும் முயல்வோம்" என உறுதியளித்தார்.