கோவிட்-19 பரிசோதனை தீவிரப்படுத்த பிரான்ஸ் திட்டம்: சீன விமான பயணிகளுக்கு புதிய உத்தரவு
சீனாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் கோவிட் பரிசோதனை கட்டாயம் என பிரான்ஸ் அறிவிக்க இருப்பதாக சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.
மீண்டும் பரவும் கொரோனா
சீனாவில் பரவ தொடங்கி இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலக நாடுகளையே முடக்கிய கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ், தற்போது சீனாவில் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் கடுமையான பூட்டுதல் மற்றும் இடைவிடாத சோதனைகளை நடத்தி வந்த பெய்ஜிங், திடீரென அனைத்து தடைகளையும் விலகி கொண்டு வைரஸுடன் வாழ்வதற்கான போக்கை மாற்றியது.
REUTERS
இதனால் சமீபத்திய வாரங்களாக நாட்டில் தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் சோதனைகளை கட்டாயமாக்க அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகள் உத்தரவிட்டன.
பிரான்ஸ் அறிவிப்பு
சீன பயணிகளுக்கு தொடர்ந்து பல்வேறு நாடுகள் கோவிட் பரிசோதனையை கட்டாயமாக்கி வரும் நிலையில், பிரான்ஸ் இதில் தற்போது இணைந்துள்ளது.
இதன்மூலம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கட்டாயமாக எதிர்மறையான COVID-19 சோதனை முடிவை வழங்க வேண்டும் என பிரான்ஸ் உத்தரவிடும் என்று சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.
அத்துடன் இடை நிறுத்தங்கள் கொண்ட விமானங்கள் உட்பட சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இந்த சோதனை தேவைப்படும் என்றும், சீனாவில் இருந்து வரும் விமானங்களில் பயணிப்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
REUTERS
இந்த நடவடிக்கைகள் தொடங்குவதற்கான திகதியை இன்னும் பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அமைக்காத நிலையில், இந்த அரசாங்க ஆணையை வெளியிட்டு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு அறிவிக்கும் என்று அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலில், ஜனவரி 1 முதல், சீனாவில் இருந்து வரும் சில பயணிகளுக்கு பிரான்ஸ் ரேண்டம் பிசிஆர் கோவிட் சோதனைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.