மரியுபோல் நகரில் சிக்கியுள்ள உக்ரைனியர்களை மீட்கும் நடவடிக்கையில் இணையும் பிரான்ஸ்
ரஷ்ய தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில், துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுடன் பிரான்சும் இணைய இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
நேற்று இது குறித்து பேசிய மேக்ரான், நாங்கள் துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து மனிதனேய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருக்கிறோம். அந்த நடவடிக்கையில், மரியுபோல் நகரிலிருந்து வெளியேற விரும்பும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றப்போகிறோம் என்றார்.
எப்படி மக்களை விடுவிப்பது என்பது தொடர்பாக, தான் அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் ரஷ்ய அதிபர் புடினுடன் புதிதாக விவாதிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களுக்குள் மக்களை வெளியேற்றும் நிலையை உருவாக்க தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரான்ஸ் தரப்பு அதிகாரிகள் மரியுபோல் மேயரிடம் பேசியபோது, 150,000 பொதுமக்கள் மோசமான சூழலில் அங்கு விடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை 2,000க்கும் அதிகமானோர் மரியுபோலில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நகர அதிகாரிகள், கடந்த வாரம் பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருந்த தியேட்டர் ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டுமே, 300 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.