பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் பிரான்சை சேர்க்க இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி... துவங்கியது ஒரு புது சர்ச்சை
பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் பிரான்சை சேர்க்க இருப்பதாக வெளியாகியுள்ள ஒரு செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பத்திரிகையான தி டைம்ஸ் பத்திரிகையை மேற்கோள் காட்டி, தி மிரர் மற்றும், தி இண்டிபெண்டன்ட் ஆகிய பத்திரிகைகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
அந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், பிரான்சிலிருந்து பிரித்தானிய வாழிட உரிமம் கொண்டவர்கள் தவிர வேறு யாரும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் (மருத்துவத்துறையினர் போன்ற சிலருக்கு விதிவிலக்களிக்கப்படலாம்). அப்படியே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுபவர்களும் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிரித்தானிய பத்திரிகைகள், பிரான்சில் தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதாகவும், ஆகவே பிரான்சிலிருந்து மக்களை பிரித்தானியாவுக்குள் அனுமதித்தால் பிரித்தானிய மக்கள் நலனுக்கு பிரச்சினை ஏற்படும் என்றும் பிரித்தானிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளன.
ஆனால், பிரான்ஸ் பக்கத்தில் இந்த செய்திகளுக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. காரணம், தற்போது பிரான்சில் தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை கொரோனா வைரஸ்கள் இணைந்துகூட 5 சதவிகிதத்திற்கும்குறைவாகவே உள்ளன.
உண்மையில், 72 சதவிகிதத்திற்கு பரவியுள்ளது பிரித்தானிய வகை கொரோனா வைரஸ்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் நான்கு வார பொதுமுடக்கத்தை அறிவிக்கும்போது பிரான்ஸ் பிரதமர் Jean Castex சொன்னதே, பிரித்தானிய வகை கொரோனா வைரஸால்தான் மூன்றாவது கொரோனா அலை உருவாகியுள்ளது என்றும், அதனால்தான் பிரான்ஸ் பொதுமுடக்கத்திற்குள் செல்கிறது என்றும்தான் என்பது குறிப்பிடத்தக்கது!