பிரான்சில் எச்சில் துப்பிய நபருக்கு அபராதம் விதிக்க சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! திடுக்கிடும் தகவல்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நபர் ஒருவரை பொலிசார் சோதனை செய்த போது, மிகப் பெரும் தொகை கொண்ட போலி யூரோ தாள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 1-ஆம் வட்டாரத்தின் Les Halles பகுதியில் கடந்த புதன் கிழமை பொலிசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் பொது இடத்தில் எச்சில் துப்பியதைக் கண்ட பொலிசார், அவரைப் பிடித்து அபராதம் விதித்தனர்.
ஆனால், அந்த நபரிடம் அடையாள அட்டை இல்லாமல் இருந்துள்ளது. அதன் பின் விசாரித்த போது, தான் செனேகலில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.
பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுக்கவே, உடனடியாக பொலிசார் அவர் வைத்திருந்த பை ஒன்றை சோதனை செய்த போது, அதில் புத்தம் புதிய யூரோ தாள்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் பொலிசாருக்கு சந்தேகம் அதிகமாகவே, உடனடியாக அவரிடம் சரியாக நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்பதை சொல் என்று கேட்க, அவர் சரியாக பதில் சொல்லாமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
பொலிசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர். 43 வயது மதிக்கத்தக்க அந்த நபர் செனேகல் நாட்டு குடியுரிமை கொண்டவர் என்பதும், அவரிடம் 15,000 போலி யூரோக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் அவருடைய வீட்டை சோதனை செய்த போது, வீட்டில் மிகப் பெரும் தொகையாக போலி யூரோ தாள்கள் இருந்துள்ளது.
சுமார் 130, 000 போலி யூரோ தாள்களை பறிமுதல் செய்த பொலிசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.