இரண்டாவது நாளாக தொடரும் பிரான்ஸ் கலவரம்: குவிக்கப்படும் 40,000 பொலிஸார்
17 வயது சாரதி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு பிரான்சில் வெடித்த கலவரத்தை கட்டுப்படுத்த 40,000 பொலிஸார் நாடு முழுவதும் குவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் வெடித்த கலவரம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகரான நாண்டெர்ரே-வில் 17 வயது சாரதி நெயில் எம்(Nael m) பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை சேர்ந்த உள்ளூர் மக்கள் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் பின்னர் கலவரமாக வெடித்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் கலவரம் தீவிரமாக வெடித்து வருகிறது.
இதுவரை 150க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், டஜன் கணக்கான பொலிஸார்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பிரான்ஸில் குவிக்கப்படும் பொலிஸார்
இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்தி நாட்டில் அமைதியை நிலைநாட்ட நாடு முழுவதும் கிட்டத்தட்ட 40,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் பாரிஸில் மட்டும் 9000 பேருக்கு எதிராக 5000 பொலிஸார்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின்(Gerald Darmanin) தெரிவித்துள்ளார்.
அத்துடன் கலவரம் தொடர்பாக அவசர கூட்டத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சர்களுடன் வியாழக்கிழமை கூட்டியுள்ளார் என அவரது அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |