புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்க பிரான்ஸ் எடுத்த அதிரடி முடிவு!
உலகிலேயே 5வது அதிக பாதிப்பைக் கொண்ட நாடாக, பிரான்ஸ் இதுவரை 2.6 மில்லியன் கொரோனா தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது, மேலும் 64,000க்கும் அதிகமான இறப்புகளையும் கொண்டுள்ளது.
நாட்டில் பெருந்தொற்று அதிகமாகப் பரவிவரும் நிலையில், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே இம்முறை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதித்துள்ளது.
பிரான்சில் புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு 8 மணிமுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கடவுள்ளது. மேலும், நகரங்களின் முக்கிய மையப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளின் முக்கிய இடங்களில், பொது வெளியில் யாரும் கூட்டம் கூடாமல் தடுக்க 100,000 பொலிஸ் கொண்ட படைகளை நிறுத்தவுள்ளது.
அந்நாட்டு மக்கள் இம்முறை தங்கள் வீட்டிற்கு உள்ளேயே புத்தாண்டு வரவேற்பு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
பாரிஸில் மாலை முதல் பாதி மெட்ரோ ரெயில் பாதைகள் மூடப்படும், நாடு முழுவதும் பெரும்பாலான பொது போக்குவரத்துகள் நிறுத்தப்படும்.
பிரான்சில் புத்தாண்டு இரவில் பல இடங்களில் கார்களை எரிப்பது போன்ற சட்டவிரோத சம்பவங்கள் நடப்பது இயல்பாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்தம் 1457 கார்கள் தீ வைக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இம்முறை இது போன்ற செயல்களை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.