சீனா சென்றடைந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: உக்ரைன் போரில் முக்கிய திருப்பங்கள் நிகழுமா?
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், சற்று முன் சீனா சென்றடைந்துள்ளார். உக்ரைன் போரில் சீனாவின் பங்களிப்பு முக்கிய திருப்பங்களை உருவாக்கும் என அஞ்சப்படும் நிலையில், மேக்ரானின் சந்திப்பு போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுமா என்னும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
துணிந்து அடி எடுத்துவைக்கும் மேக்ரான்
பெரிய நாடுகள் கூட உக்ரைன் போர் விடயத்தில் தயக்கம் காட்டிவந்தபோது, உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக பலமுறை ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மேக்ரான்.
உலகமே அதற்காக அவரை கேலி செய்தபோதும், சற்றும் பின்வாங்கவில்லை அவர்.
தற்போது, அடுத்த கட்டமாக, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கை சீனா சென்று சந்திக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் மேக்ரான்.
இன்று, 5.4.2023, புதன்கிழமை, சற்று முன் சீனா சென்றடைந்துள்ளார் மேக்ரான்.
The Wall Street Journal
மேக்ரான் ஜீ ஜின்பிங் சந்திப்பு பலன் தருமா?
ரஷ்யாவும், சீனாவும் பல ஆண்டுகளாக நண்பர்களாகத் திகழ்கின்றன. சமீபத்தில் கூட தங்கள் உறவை உலகுக்குக் காட்டும் வகையில் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துக்கொண்டார்கள்.
அத்துடன், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை இதுவரை சீனா கண்டிக்கவில்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் மேக்ரான் சீனா சென்றுள்ளார். நாளை அவர் ஜீ ஜின்பிங்கை சந்திக்கிறார்.
விடயம் என்னவென்றால், ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் கொடுக்கக்கூடும் என்ற அச்சம் பல பெரிய நாடுகளுக்கு உள்ளது. அப்படி ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்குமானால், அது போரின் போக்கையே மாற்றிவிடலாம்.
ஆக, மேக்ரானின் முக்கிய பொறுப்பு, சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதைத் தடுப்பதாகும். அத்துடன், போரை முடிவுக்குக் கொண்டு வர ஜீ ஜின்பிங்கை வலியுறுத்துவதும் அவரது நோக்கம். மேக்ரானுடைய முயற்சி பலனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.