உக்ரைன் போர்... பிரித்தானியாவில் டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு: எச்சரிக்கும் நிபுணர்கள்
உக்ரைன் போர் நீடித்துவரும் நிலையில், ரஷ்ய எரிபொருட்களை நம்பியிருக்கும் நாடுகள் தீர்க்கமான முடிவுக்கு வராததால் பிரித்தானியாவில் டீசல் தட்டுப்பாடு அதிகரிக்கலாம் என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவின் டீசல் தேவையில் பாதி அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் பெட்ரோல் தேவையை பிரித்தானியாவே ஈடு செய்து கொள்கிறது. இருப்பினும் மூன்றில் ஒருபங்கு இறக்குமதியை ரஷ்யாவில் இருந்தே பிரித்தானியா பெற்றுவருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நீக்குவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார். மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளிடம் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களால் இது ஈடு செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எண்ணெய் விலையை குறைக்க உதவும் வகையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திப்பதற்காக பிரதமர் வரும் நாட்களில் சவுதி அரேபியா செல்லலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் 12 மில்லியன் டீசல் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கடுமையான டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி ந்செய்யபடாவிட்டால், உண்மையான நெருக்கடியை மக்கள் எதிர்கொள்வார்கள் எனவும் நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஏப்ரல் மாதத்தில் இருந்தே சில வேளை டீசல் விற்பனையில் கட்டுப்பாடுகளை கொண்டுவரலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, எண்ணெய் விநியோகப் பிரச்சினை தொடர்பில் விவாதிக்க வேண்டும் என்ற ஜோ பைடனின் கோரிக்கையை சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.