இந்தியா, சீனா மீது வரி விதிக்க G7, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நெருக்கடி அளிக்கும் அமெரிக்கா
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா மீது வரி விதிக்க வேண்டும் என G7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க கருவூலம் அழைப்பு விடுத்துள்ளது.
போருக்கான நிதி
அத்துடன் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க அவசர G7 நிதிக் கூட்டத்தை கூட்டவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கருவூல செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், சீனாவும் இந்தியாவும் ரஷ்ய எண்ணெயை வாங்குவது புடினின் போருக்கான நிதியளிப்பது போன்றது. இது உக்ரேனிய மக்களின் அர்த்தமற்ற மரணங்களை நீட்டிக்க செய்கிறது.
மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகள் தீவிரமாக இருந்தால், அவர்கள் எங்களுடன் சேர்ந்து அர்த்தமுள்ள வரிகளை விதிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினோம், அவை போர் முடிவடையும் நாளில் ரத்து செய்யப்படும் என்றார்.
ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவை வலியுறுத்துவதற்காக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.
பழிவாங்கும் வரி
ஏற்கனவே இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது இந்தியா மீது 50 சதவீத வரி அமுலில் உள்ளது. ஆனால், ரஷ்ய எண்ணெய் வாங்கும் சீனா மீது இப்படியான வரி விதிப்பால் நெருக்கடி அளிக்க ட்ரம்ப் நிர்வாகம் தவிர்த்து வருகிறது.
மட்டுமின்றி, ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுடன் ஒரு நுட்பமான வர்த்தக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதால், அது பழிவாங்கும் வரிகளைக் குறைத்துள்ளது.
இதனிடையே, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், சீன துணைப் பிரதமர் ஹீ லிஃபெங்குடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்காக வெள்ளிக்கிழமை மாட்ரிட் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |