உக்ரைனுக்கு G7 நாடுகளின் ரூ 21,000 கோடி கடனுதவி... பகல் கொள்ளை என கொந்தளித்த ரஷ்யா
உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டொலர் கடனுதவி அளிக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அப்பட்டமான பகல் கொள்ளை என லண்டனில் செயல்படும் ரஷ்ய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனுக்கு கடனுதவி
உக்ரைன் மீதான போருக்கு பின்னர் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்தே 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் உக்ரைனுக்கு கடனுதவியாக அளிக்கப்பட உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இது தொடர்பில் விளக்கமளித்திருந்த பிரித்தானியா, உக்ரைனுக்கு G7 நாடுகளின் ஒப்புதலுடன் அளிக்கப்படும் மிகப்பெரிய கடனுதவி இதுவென்றும், ரஷ்ய மத்திய வங்கியின் முடக்கப்பட்ட தொகையில் இது ஒருபகுதி என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்திய மதிப்பில் ரூ 21,238 கோடி தொகையில் உக்ரைன் ஆயுதங்கள் வாங்கவும், சேதமடைந்துள்ள உள்கட்டமைப்புகளை சீரமைக்கவும் பயன்படுத்த முடியும். கடந்த ஜூலை மாதம் இந்த கடனுதவிக்கு பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட G7 நாடுகள் ஒப்புதல் அளித்திருந்தன.
இந்த நிலையிலேயே லண்டனில் அமைந்துள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் தங்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய பணத்தில் இருந்து பெருந்தொகையை உக்ரைனுக்கு கடனாக அளிப்பது என்பது அப்பட்டமான பகல் கொள்ளை என்றும், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கையை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பகல் கொள்ளை
இதனிடையே, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி தெரிவிக்கையில், இந்த பணம் உக்ரைனின் இராணுவத்திற்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றார்.
மட்டுமின்றி, சில நீண்ட தூர ஏவுகணைகளை விட அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களை உருவாக்கவும் இந்த தொகை உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரகமும் தங்களின் கடும் எதிர்ப்பை இந்தக் கடனுதவி தொடர்பில் பதிவு செய்திருந்தது. முடக்கப்பட்டுள்ள ரஷ்ய பணத்தில் மொத்தம் 50 பில்லியன் டொலர் கடனுதவி அளிக்கவே G7 நாடுகள் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் இது வெறும் பகல் கொள்ளை என ரஷ்ய வெளிவிவகார அமைச்சரகம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |