உடனடி முடிவெடுங்கள்... ரஷ்யாவிற்கு மிரட்டல் விடுத்த G7 நாடுகள்
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளத் தவறினால், அதன் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என்று G7 நாடுகள் அச்சுறுத்தியுள்ளன.
முயற்சிகள் தோல்வியடைந்தால்
கனடாவில் நடந்த G7 நாடுகளின் நிதியமைச்சர்களே ரஷ்ய ஜனாதிபதிக்கு போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ள அச்சுறுத்தல் விடுத்தவர்கள். உக்ரைனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தால், ரஷ்யாவை எவ்வாறு பின்னுக்குத் தள்ள முடியும் என்பதை குழு ஆராயும் என்று நிதியமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அத்தகைய போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்படாவிட்டால், தடைகளை மேலும் அதிகரிப்பது போன்ற அழுத்தத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உட்பட அனைத்து சாத்தியமான அம்சங்களையும் நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏழு பேர் குழு என அறியப்படும் G7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியோர், போருக்கு நிதியளித்த எந்த நாடுகளும் உக்ரைனின் மறுகட்டமைப்பிலிருந்து பயனடையத் தகுதியற்றவர்களாக இருப்பதை உறுதிசெய்ய இணைந்து செயல்படுவதாக உறுதியளித்தன.
ஐரோப்பிய நாடாளுமன்றம்
ஆனால், அது எந்த நாடுகள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க G7 குழு தயங்கியுள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா ஆயுத ஏற்றுமதி செய்துள்ளதை மேற்கத்திய நாடுகள் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதனிடையே, G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் பற்றிய குறிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும், G7 கூட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ரஷ்ய உர இறக்குமதிக்கான வரிகளை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மசோதாவின்படி, ஜூலை 1 முதல் வரிகள் அமுல்படுத்தப்பட்டு,
மூன்று ஆண்டுகளில் படிப்படியாக 6.5 சதவீதத்திலிருந்து சுமார் 100 சதவீதமாக அதிகரித்து, வர்த்தகத்தை நிறுத்தும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |