ஜேர்மனி சுற்றுலாப் பயணிக்கு 7 ஆண்டுகள் சிறை! 150,000 பவுண்ட்கள் அபராதம்
பிரித்தானியரை தாக்கி அவர் உயிரிழந்த சம்பவத்தில், ஜேர்மனி சுற்றுலாப் பயணிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணி
செக் குடியரசு நாட்டின் பிராகிற்கு பிரித்தானியாவைச் சேர்ந்த டேவிட் ரிச்சர்ட் (31) என்ற நபர் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டார்.
அவர் தனது நண்பர்களுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டாட்டத்திற்காக சென்றிருக்கிறார். அவர்களும் பிற சுற்றுலாப் பயணிகளும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் போத்தல்களால் தாக்கிக் கொண்டனர். இதில் தலையில் படுகாயமடைந்த டேவிட் ரிச்சர்ட் மயங்கி விழுந்தார்.
பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜேர்மனியைச் சேர்ந்த ஜோயல் ஹோப் என்பவர்தான் அவரது இறப்பிற்கு காரணம் என தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. ரிச்சர்ட்டின் மரணத்திற்கு தான் காரணம் என ஹோப் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
7 ஆண்டுகள் சிறை
மேலும் அவர், மறைந்த டேவிட் ரிச்சர்ட் மற்றும் அவரது பிள்ளைகளை நினைக்காத நாள் இல்லை என்றும், எந்த தண்டனையை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜோயல் ஹோப்பிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் அவர் செக் குடியரசில் நுழையக் கூடாது என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அத்துடன் டேவிட் ரிச்சர்ட்டின் குடும்பத்திற்கு 158, 758 பவுண்ட்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |