சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம்! ஜேர்மனியில் பெருகும் ஆதரவு
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஜேர்மனியில் அதிக அளவு ஆதரவு ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களுக்கு தடை
சமீபத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு சிறுவர்களின் மனநிலை, படிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிப்பதாக தெரிவித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த சட்டத்துக்கு உடன்படாவிட்டால் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் இந்த அதிரடி முடிவை அடுத்து சுவிட்சர்லாந்திலும் சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க அந்நாட்டு மக்கள் விரும்புவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடந்த ஆய்வில் கிட்டத்தட்ட 78% சுவிஸ் நாட்டவர் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிப்பதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியிலும் பெரும் ஆதரவு
இந்நிலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஜேர்மனியிலும் ஆதரவு பெருகி வருகிறது.
YouGov என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் 77% ஜேர்மனியர்கள் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் 82% பேர் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |