ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: நீதிபதியின் முடிவு
தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற தங்கள் மகள் நாடு திரும்பாததால், மகளைக் காணவில்லை என பொலிசில் புகார் செய்தார்கள் ஒரு பிரித்தானிய தம்பதியர்.
இந்நிலையில், அவர்களுடைய மகள் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
மகளைக் காணவில்லை என புகாரளித்த பெற்றோர்
இங்கிலாந்திலுள்ள Knebworth என்னுமிடத்தைச் சேர்ந்த கேமரான் (Cameron Bradford, 21), தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.
அவர் ஹீத்ரோ விமான நிலையம் வந்து சேரவேண்டிய நிலையில், மகளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பெற்றோர் கேமரானைக் காணாமல் பொலிசில் புகார் செய்துள்ளனர்.
பின்னர், கேமரான் ஜேர்மனியிலுள்ள மியூனிக் நகரில் காவலில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மியூனிக் விமான நிலையம் வந்திறங்கிய கேமரானின் உடைமைகளை பரிசோதித்த அதிகாரிகள், அவர் தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் ஒன்றைக் கடத்திவந்தது தெரியவந்ததால் அவரைக் கைது செய்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து அவர் மியூனிக் நகரில் காவலில் அடைக்கப்பட்டார்.
நீதிபதியின் முடிவு
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதியான Wilfried Dudek, கேமரான் இளம் வயதிலேயே தவறான நபர்களிடம் சிக்கி வாழ்வில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.
மேலும், கேமரானை ஒருவர் மிரட்டி, தாய்லாந்திலிருந்து ஒரு பார்சலைக் கொண்டுவர கட்டாயப்படுத்தியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, கேமரானுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தாலும், இப்போதைக்கு அவர் சிறைக்குச் செல்லவேண்டியதில்லை என்றும், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவர் சிறை செல்ல நேரிடும் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் நீதிபதி.
ஆக, சிறையில் அடைக்கப்படுவதிலிருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார் கேமரான்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |