ட்ரம்பால் அணு ஆயுதம் பக்கம் கவனத்தைத் திருப்பும் நாடுகள்: ஜேர்மனியும்
நேட்டோ அமைப்பில் இருப்பது பாதுகாப்பு, ஒரு உறுப்பு நாட்டுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் மற்ற நாடுகள் உதவிக்கு வரும், குறிப்பாக, அமெரிக்கா உதவிக்கு வரும் என்ற எண்ணம் பல நாடுகளுக்கும் இருந்தது.
ஆனால், அந்த எண்ணத்தை மாற்றியுள்ளார் ட்ரம்ப்!
அணு ஆயுதம் பக்கம் கவனத்தைத் திருப்பும் நாடுகள்
உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துவந்த உதவிகளை நிறுத்தியுள்ள விடயம், ஐரோப்பிய நாடுகள் பலவற்றை, தங்கள் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைத்துள்ளது.
ஆக, தங்கள் பாதுகாப்பை, தாங்கள்தான் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் வரத்துவங்கியுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஃபெடரல் ஜேர்மன் குடியரசு, சோவியத் கூட்டணிக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் கூட்டணிக்குள் வரவேற்கப்பட்டது.
அப்போது, அமெரிக்காவின் அணு பாதுகாப்பு உள்ளது, அதாவது, பிரச்சினைக்குரிய நேரங்களில் அமெரிக்கா தனது அணு ஆயுதங்கள் மூலம் ஜேர்மனிக்கு உதவும் என்ற நம்பிக்கை காரணமாக, பிரித்தானியா மற்றும் பிரான்சைப் போலில்லாமல், Treaty on the Non-Proliferation of Nuclear Weapons என்னும் ஒப்பந்தத்தின் கீழ் தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்வதில்லை என ஜேர்மனி அறிவித்தது.
ஆனால், இப்போது புடினால் பிரச்சினை ஏற்படுமானால், அமெரிக்கா உதவுவது சந்தேகமே என்ற எண்ணம் பரவிவருவதால், மீண்டும் அணு ஆயுதங்கள் குறித்த எண்ணம் ஜேர்மனிக்கு வரத்துவங்கியுள்ளது.
ஜேர்மன் அரசியல்வாதிகள் பலரும், அணு ஆயுத பாதுகாப்பு குறித்து பேசத்துவங்கியுள்ளர்கள்.
சமீபத்தில் கூட, ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலராக இருக்கும் பிரெட்ரிக் மெர்ஸ், பிரான்சுடன் அணு ஆயுத பகிர்வு குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தார்.
பாரீஸும் லண்டனும், தங்கள் அணு ஆயுத பாதுகாப்பை எங்களுக்கும் விரிவாக்கம் செய்யுமா என்பதைக் குறித்து விவாதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார் அவர்.
அதைத் தொடர்ந்து, அமெரிக்கா உதவிக்கு வராத பட்சத்தில், ஐரோப்பாவைக் காப்பாற்ற பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களையும் பகிர தயாராக இருப்பதாக மேக்ரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |