கடினமான நெருக்கடிக்கு தயாராகுங்கள்! நாட்டு மக்களுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை
கடினமான நெருக்கடிக்கு தயாராகுங்கள் என வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மையை எதிர்கொள்கிறது என்ற மனித உரிமைகள் குழுக்களின் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கிம் ஜாங் உன் இவ்வாறு அறிவித்துள்ளார்.
கட்சி மாநாட்டில் பேசிய கிம் ஜாங் உன், தற்போதைய நிலைமையை நாடு 1990-களில் சந்தித்த கொடிய பஞ்சத்துடன் ஒப்பிட்டார். கொரோனா தொற்று காரணமாக வட கொரியா தனது எல்லைகளை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வார தொடக்கத்தில், நாடு மிக மோசமான நிலைமை மற்றும் முன்கண்டிராத வகையில் பல சவால்களை எதிர்கொண்டதாக எச்சரித்திருந்தார்.
வட கொரிய மக்கள் உணவின்றி தவித்து வருவதாக பல மாதங்காள எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக சீன எல்லைக்கு அருகே உள்ள நகரங்களில் நிலைமை மிக மோசமடைந்து வருகிறதாம்.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வாளர் லினா யூன், சீனாவிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக எந்தவொரு உணவும் நாட்டிற்குள் செல்லவில்லை என்று கூறினார்.
வட கொரியாவில் பிச்சைக்காரர்கள் அதிகரித்துள்ளனர், சிலர் எல்லைப் பகுதியில் பட்டினியால் இறந்தனர், சோப்பு, பேஸ்ட் அல்லது பேட்டரிகள் எதுவும் இல்லை என லினா யூன் கூறினார்.
