பூமியிலேயே அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடு... திடீர் உத்தரவை பிறப்பித்த அரசாங்கம்
ஜிப்ரால்டர் நாட்டில் தகுதியான மொத்த மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரால்டர் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தனியாக விருந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையும் நான்கு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திலேயே ஜிப்ரால்டர் அரசாங்கம் குறித்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொடுதல் மற்றும் ஆரத்தழுவுதல் உள்ளிட்டவைகளும் தவிர்க்க கோரப்பட்டுள்ளது. மேலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி திடீரென்று அதிக எண்ணிக்கையிலான மக்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே ஜிப்ரால்டர் அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்பெயினுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஜிப்ரால்டர் நாட்டில், கடந்த ஏழு நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 56 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு 10க்கும் குறைவாக இருந்தது. ஜிப்ரால்டர் உலகிலேயே அதிக தடுப்பூசி விகிதத்தைக் கொண்டிருந்தாலும், இந்த அதிவேக பாதிப்பு எண்ணிக்கையானது அதிகாரிகளை குழப்பமடைய செய்துள்ளது.
ஜிப்ரால்டரில் தகுதியுடைய அனைத்து மக்களுக்கும் மார்ச் முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் கடைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிக்கான நடவடிக்கைகளை ஜிப்ரால்டர் நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. ஜிப்ரால்டர் மட்டுமின்றி, தகுதியுடைய 94% மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரில், அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்தே காணப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, அயர்லாந்தில், தகுதியுடைய மக்களில் 92% முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் எண்ணிக்கையானது ஆகஸ்ட் மாதத்திலிருந்து தோராயமாக இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.