இறுகும் போர் நெருக்கடி... லெபனானுக்கு விரையும் இத்தாலி பிரதமர்
லெபனானில் ஐக்கிய நாடுகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்த நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பெய்ரூட் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் ஐக்கிய நாடுகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுத்த சம்பவம் இத்தாலி உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை கோபம் கொள்ள வைத்துள்ளது.
இந்த நிலையிலேயே எதிர்வரும் 18ம் திகதி பிரதமர் ஜார்ஜியா மெலோனி லெபனான் புறப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். UNIFIL எனப்படும் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை கடந்த பல ஆண்டுகளாக லெபனானில் முகாமிட்டுள்ளது.
ஆனால் தற்போது இந்த அமைதிப்படையினர் முகாமிட்டுள்ள பகுதியில் தான் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே தீவிரமான சண்டை வலுத்துள்ளது.
இதனையடுத்து, குறிப்பிட்ட பகுதியில் இருந்து, 1,000 இத்தாலிய வீரர்கள் உட்பட ஐ.நா அமைதிப்படையினரை வெளியேற்ற வேண்டும் என இஸ்ரேல் கோரி வருகிறது. ஆனால், அந்த பேச்சுக்கே இடமில்லை என 40க்கும் மேற்பட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அமைதிப்படை முகாம் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலையும் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில், இத்தாலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மெலோனி, இஸ்ரேலியப் படைகளின் அணுகுமுறை முற்றிலும் நியாயமற்றது என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை
மட்டுமின்றி, லெபனானில் அமைதிப்படைகள் முன்னெடுக்கும் பணிகளுக்கான ஐ.நா தீர்மானத்தின் அப்பட்டமான விதி மீறல் என்றும் மெலோனி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைதிப்படையினரை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்டுள்ள மெலோனி, இது இது அமைதிப்படையினரின் பணியின் நம்பகத்தன்மையை, ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றார்.
தற்போது எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் UNIFIL முகாம் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கமளித்துள்ளார்,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |