போர்களுக்கு மத்தியில்... உச்சம் தொட்ட உலகளாவிய ஆயுத விற்பனை
உலகளவில் 100 பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் ஆயுதங்கள் மற்றும் இராணுவ சேவைகளால் ஈட்டிய வருவாய் கடந்த ஆண்டு 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆயுத வருவாய்
உக்ரைன் மற்றும் காஸாவில் நடந்த போர்களாலும், உலகளாவிய மற்றும் பிராந்திய அரசியல் நெருக்கடிகளாலும் ஆயுதங்களின் தேவை அதிகரித்துள்ளது என்றே ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்தப் பட்டியலில் உள்ள மூன்று இந்திய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த ஆயுத வருவாய், உள்நாட்டு ஒப்பந்தங்களின் பின்னணியில் 8.2 சதவீதம் அதிகரித்து 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 100 ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவ சேவை நிறுவனங்களின் பட்டியலை ஸ்வீடன் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் Hindustan Aeronautics நிறுவனம் 44வது இடத்திலும், Bharat Electronics நிறுவனம் 58வது இடத்திலும், Mazagon Dock Shipbuilders நிறுவனம் 91வது இடத்திலும் உள்ளன.
பட்டியலிடப்பட்ட இந்த 100 நிறுவனங்கலின் ஆயுதங்கள் மற்றும் இராணுவ சேவைகளின் விற்பனையிலிருந்து வருவாய் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 679 பில்லியன் டொலர் என தெரிய வந்துள்ளது.

2018 க்குப் பிறகு முதல் முறையாக, உலகின் ஐந்து பெரிய ஆயுத நிறுவனங்களும் தங்கள் ஆயுத விற்பனை வருவாயை அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் Lockheed Martin Corp, RTX, Northrop Grumman Corp மற்றும் பிரித்தானியாவின் BAE Systems மற்றும் அமெரிக்காவின் Dynamics Corp ஆகிய நிறுவனங்களே அதிக வருவாய் ஈட்டிய ஐந்து நிறுவனங்கள்.
2024 ஆம் ஆண்டில், முதல் 100 இடங்களில் உள்ள அமெரிக்க ஆயுத நிறுவனங்களின் ஒருங்கிணைந்த ஆயுத வருவாய் 3.8 சதவீதம் அதிகரித்து 334 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது.
ரஷ்ய நிறுவனங்கள்
பட்டியலில் உள்ள 39 அமெரிக்க நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் தங்கள் ஆயுத வருவாயை அதிகரித்து வந்துள்ளன. வருவாய் மற்றும் புதிய ஒப்பந்தங்களின் அதிகரிப்பு பல ஆயுத நிறுவனங்களை உற்பத்தி திறன்களை விரிவுபடுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும், புதிய துணை நிறுவனங்களை நிறுவவும் அல்லது கையகப்படுத்துதல்களை நடத்தவும் தூண்டியுள்ளது.

பட்டியலில் உள்ள ஐரோப்பாவின் (ரஷ்யாவைத் தவிர்த்து) 26 ஆயுத நிறுவனங்களில், 23 நிறுவனங்கள் அதிகரித்த ஆயுத வருவாயைப் பதிவு செய்தன. அவர்களின் மொத்த ஆயுத வருவாய் 13 சதவீதம் அதிகரித்து 151 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
சர்வதேச தடைகள் காரணமாக உதிரிபாகங்கள் பற்றாக்குறை ஏற்பட்ட போதிலும், பட்டியலில் உள்ள இரண்டு ரஷ்ய ஆயுத நிறுவனங்கள் தங்கள் ஒருங்கிணைந்த ஆயுத வருவாயை 23 சதவீதம் அதிகரித்து 31.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என பதிவு செய்துள்ளது.

முதல் முறையாக, முதல் 100 ஆயுத நிறுவனங்களில் ஒன்பது மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ளன, அவற்றின் மொத்த ஆயுத வருவாய் 31.0 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிய வந்துள்ளது.
பட்டியலில் உள்ள மூன்று இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்களின் ஒருங்கிணைந்த ஆயுத வருவாய் 16 சதவீதம் அதிகரித்து 16.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |