உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு
ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவலை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
246 பேருக்கு எபோலா தொற்று
காங்கோ ஜனநாயகக் குடியரசின் இடுரி மாகாணத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 80 பேர்கள் வரையில் எபோலா பாதிப்பால் மரணமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு பேருக்கு ஆய்வகத்தில் எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 246 பேருக்கு எபோலா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இடுரி மாகாணத்தின் புனியா, ருவாம்பாரா மற்றும் மோங்ப்வாலு உள்ளிட்ட குறைந்தது மூன்று சுகாதார மண்டலங்களில் தீவிர நோய்ப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆப்பிரிக்காவின் CDC முகமை தெரிவிக்கையில், சனிக்கிழமையன்று கிழக்கு மாகாணத்தில் குறைந்தது 87 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 336 பேருக்கு நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் 13 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நோய் உறுதி செய்யப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில், காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து பயணம் செய்த நபர்களுக்கு, ஆய்வகத்தால் உறுதிசெய்யப்பட்டதில் இருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார முகமை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எபோலா பரவல் பெருந்தொற்று அவசரநிலைக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சமூகப் பரவல் தீவிரம்
இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகள் அண்டை நாடுகளான உகாண்டா மற்றும் தெற்கு சூடானுக்கு அருகில் இருப்பதால், நோய் மேலும் பரவும் அபாயம் குறித்து ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் கவலை தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனையையும், தொடர்புகளைக் கண்டறிவதையும் தீவிரப்படுத்த விரைந்து செயல்பட்டு வரும் நிலையில், சமூகப் பரவல் தீவிரமாகி வருவதாகவும் ஆப்பிரிக்காவின் CDC முகமை எச்சரித்துள்ளது.

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 87 மரணங்களில், 57 மோங்வாலு சுகாதார மண்டலத்திலும், 27 ருவாம்பாரா சுகாதார மண்டலத்திலும், மூன்று புனியாவிலும் பதிவாகியுள்ளன.
குறிப்பாக மோங்வாலுவில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு பாதிப்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
1976-ல் காங்கோ ஜனநாயகக் குடியரசில் இந்த நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து, இதுவரை 17 முறை எபோலா நோய்ப் பரவல்களைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |