கோடிக்கணக்கில் பணம்.. கிலோ கணக்கில் தங்கம்.. சொகுசு வீடுகள்: அரசு ஊழியரின் சொத்தை பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு அதிகாரி கைது
இந்திய மாநிலமான ஒடிசாவில் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய பிரதீப் குமார் ராத் என்ற அரசு ஊழியர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளார்.
இவர் கடந்த 1991 -ம் ஆண்டில் ரூ.2000 மாத சம்பளத்துடன் அரசு பணியில் சேர்ந்துள்ளார். இதன் பின்னர் 2011 -ம் ஆண்டில் உதவி பொறியாளராக பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து, 2022 -ம் ஆண்டில் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், இவரிடம் பல கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு பொலிஸாருக்கு புகார்கள் வந்தன.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை என்று தெரியவந்ததால் கட்டாக் நகரில் உள்ள தலைமைக் கட்டுமானப் பொறியாளர் அலுவலகத்தில் பிரதீப் குமார் ராத் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வளவு சொத்துக்கள்?
இந்நிலையில், பிரதீப் குமார் ராத் சேர்த்த சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு பொலிஸார் ஒடிசா முழுவதும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
பின்னர், நீதிமன்ற உத்தரவுபடி பிரதீப் குமார் ராத்தின் வீடு உள்பட 12 வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் இவருக்கு 2 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், 45 பிளாட்டுகள் (3வீடுகள் ரூ.1 கோடி மதிப்பு) போன்ற சட்ட விரோதமான சொத்துக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனை தவிர மருந்துக் கடை, கிரஷர் யூனிட், தோராயமாக 1 கிலோ தங்கம், வங்கியில் டெபாசிட்கள் ரூ.1.62 கோடிக்கு மேல் உள்ளது. மேலும், 2 நான்கு சக்கர வாகனங்கள், 2 ஜேசிபிகள், 1 எக்ஸ்கவேட்டர், 1 ராக் பிரேக்கர் ஆகியவையும் உள்ளன.
தற்போது, பிரதீப் குமார் ராத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொலிஸ் காவலில் வைத்து விசாரித்தால் தான் முழுமையாக எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது தெரியவரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |