கட்டுப்படுத்த முடியவில்லை.. என்னை மன்னித்துவிடுங்கள்! நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர்
க்ரீஸ் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தவறிவிட்டேன் என்று நாட்டு மக்களிடம் அந்நாட்டு பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
க்ரீஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள தீவுகளில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பநிலை சுமார் 45 டிகிரி வரை உள்ளதாக கூறப்படுகிறது.
காட்டுத்தீயில் மக்கள் குடியிருப்புகள் எரிந்து நாசமாகிவிட்டதால் பல ஆயிரம் மக்கள் தங்கள் இருப்பிடம் விட்டு வேறு பகுதிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுக்குள் அடக்க அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இருப்பினும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில் க்ரீஸ் நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் கூறியது, சொந்த வீடு கண் முன் எரியும் பொழுது மக்கள் அடையும் துன்பங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாங்கள் தீயை அணைக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
ஆனால் அவை கைகொடுக்கவில்லை என்பதால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார். காட்டுத்தீயால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அந்நாட்டு அரசாங்கம் 500 மில்லியன் யூரோ வரை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.