இஸ்ரேல் சிறையில் அளிக்கப்பட்ட சித்திரவதை... கிரெட்டா துன்பெர்க் பகீர் குற்றச்சாட்டு
இஸ்ரேலிய சிறையில் சித்திரவதைக்கு ஆளானதாக ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடத்தப்பட்டு சித்திரவதை
காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் பயணப்பட்ட Flotilla படகுகளில், தம்முடன் கைதான பல ஆர்வலர்களுக்கும் இஸ்ரேல் சிறையில் மிக மோசமான அனுபவம் ஏற்பட்டதாக துன்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாக்ஹோமில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், தானும் மற்றவர்களும் இஸ்ரேலிய இராணுவத்தால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக துன்பெர்க் குற்றம் சாட்டினார். ஆனால், தமக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், மற்ற கைதிகளுக்கு முக்கியமான மருந்துகள் மறுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில், தான் அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள துன்பெர்க்,
அது தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டாம் என்றும், கிரெட்டா சித்திரவதை செய்யப்பட்டார் என்பதல்ல செய்தி, காஸா மக்கள் படும் துன்பங்கள் செய்தியாக வேண்டும் என்றார்.
விளம்பர நாடகம்
ஆனால் கிரெட்டா உட்பட கைதிகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டதாக ஒப்புக்கொள்ள இஸ்ரேல் தரப்பில் இருந்து தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் போதுமான உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அவர்கள் சட்ட ஆலோசகரை அணுகுவதை மறுக்கப்படவில்லை என்றும், அவர்களின் அனைத்து சட்ட உரிமைகளும் முழுமையாக நிலைநிறுத்தப்பட்டன என்றும் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் பயணப்பட்ட Flotilla படகுகளில் 478 பேர்களுடன் கைது செய்யப்பட்ட துன்பெர்க் திங்களன்று, இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
காஸா மக்கள் பட்டினியில் தவிப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் கட்டமைக்கப்பட்ட போலி செய்திகள் என கூறும் இஸ்ரேல், Flotilla படகுகளில் உதவிப்பொருட்களுடன் காஸாவிற்கு சென்றது வெறும் விளம்பர நாடகம் என்றும், இது ஹமாஸ் படைகளுக்கு உதவும் நடவடிக்கை என்றும் பதிலளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |