கைவரிசை காட்டிய வடகொரியா... தென் கொரிய கிரிப்டோ நிறுவனத்தில் பெருந்தொகை கொள்ளை
தென் கொரியாவின் Upbit கிரிப்டோ நிறுவனத்தில் ஊடுருவி 44.5 பில்லியன் வோன் கொள்ளையிட்ட சம்பவத்தில் வட கொரியாவிற்கு பங்கிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Lazarus குழு
தென் கொரிய அதிகாரிகள் குழு இந்த விவகாரத்தில் முன்னெடுத்த விசாரணையில், வட கொரியாவின் உளவு அமைப்பின் ஒரு பகுதியான Lazarus இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

Upbit கிரிப்டோ நிறுவனத்தின் தொழில்நுட்பம் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னரே, வட கொரியாவின் Lazarus குழு இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் பல கிரிப்டோ கொள்ளைகளுக்கு Lazarus குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வட கொரியாவின் சைபர் நடவடிக்கைகள் மிகவும் முன்னேறிய தொடர்ச்சியான அச்சுறுத்தல்களில் ஒன்றாக அமெரிக்க ஃபெடரல் புலனாய்வுப் பிரிவும் உறுதி செய்துள்ளது.
வியாழக்கிழமை 44.5 பில்லியன் வோன் கொள்ளை சம்பவத்திற்கு இலக்கான Upbit கிரிப்டோ நிறுவனத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டும் Lazarus குழு 58 பில்லியன் வோன் தொகையை கொள்ளையிட்டுள்ளது.
சைபர் தாக்குதல்
இந்த நிலையில், சைபர் குற்றங்களை விசாரிக்கும் தென் கொரியாவின் தேசிய காவல் முகமையின் சிறப்பு அதிகாரி ஒருவர், இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஆனால் மேலதிக தகவல் எதையும் வெளியிட மறுத்துள்ளார். Upbit நிறுவனத்தின் உரிமையாளரான Dunamu-வின் நிர்வாகிகளில் ஒருவர் தெரிவிக்கையில், கிரிப்டோ கொள்ளை தொடர்பான காரணம் மற்றும் அளவை தற்போது ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Dunamu நிறுவனத்தை தென் கொரியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Naver கையகப்படுத்தியதாக அறிவித்த சில மணி நேரங்களில் Upbit நிறுவனம் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளது. தென் கொரியாவின் மிகப்பெரிய கிரிப்டோ நிறுவனம் இந்த Upbit என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |