தோண்ட தோண்ட வரும் சடலங்கள்! அழுகி துர்நாற்றம் வீசும் துயரம்: நிலநடுக்கத்தில் சிக்கிய நாட்டின் பரிதாப நிலை
ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 2,000 மேற்பட்டவர்கள் சிக்கி உயிரிழந்ததாகவும் மேலும் மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் வீடுகள், கடைகள், தேவாலயங்கள் போன்ற கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,189 ஆக அதிகரித்துள்ளது என ஹைதி அரசு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில் ஹைதியின் முக்கிய பகுதிகளில் உள்ள 48 குடியிருப்புகள் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்து வீடுகள் இருந்த அடையாளமே தெரியாத வண்ணம் மாறியுள்ளது. அவர்களை தேடும் பணிகளில் மீட்பு துறையினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் பிணங்கள் அழுகி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டது. இந்த விபத்தில் ஆயிக்கணக்கானோர் தங்கள் உறவுகளை பிரிந்து தவித்து வருகின்றனர்.