போண்டி துப்பாக்கிச் சூடு... உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்ட Hanukkah பாதுகாப்பு
சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, பெர்லின், லண்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஹனுக்கா நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வலுவான பாதுகாப்பு ஏற்பாடு
ஜேர்மன் தலைநகரின் பிராண்டன்பர்க் வாயிலைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடபப்ட்டுள்ளதாக பெர்லின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் ஹனுக்கா கொண்டாட்டத்தின் முதல் இரவைக் குறிக்கும் வகையில் ஒரு பெரிய மின்சார மெனோரா ஏற்றப்படும். இந்த நிலையில், பெர்லின் நகர காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில்,
பிராண்டன்பர்க் வாயிலில் இன்றிரவு ஹனுக்கா நிகழ்வுக்கு விரிவான பாதுகாப்பை நாங்கள் நீண்ட காலமாக திட்டமிட்டுள்ளோம். நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவோம், மேலும் அங்கு வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பராமரிப்போம் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நியூயார்க் நகரத்தில் ஹனுக்கா கொண்டாட்டங்கள் மற்றும் ஜெப ஆலயங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.
நகரம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பொது மெனோரா விளக்குகள் உட்பட யூத சமூகம் தங்கள் விடுமுறையை பாதுகாப்பாக கொண்டாடுவதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம் எனவும், போண்டியில் காயமடைந்தவர்களுக்காக ஜெபிப்போம், வெறுப்புக்கு எதிராக ஒன்றிணைவோம் என்றும் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வார்சாவின் பிரதான ஜெப ஆலயத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்விற்காக ஆயுதமேந்திய பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது. போலந்து காவல்துறையினரும் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

காஸா அட்டூழியத்தை அடுத்து வெளிநாடுகளில் பல காலமாக குடியிருக்கும் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சிட்னி தாக்குதலைத் தொடர்ந்து தூதரகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் வலுப்படுத்தியிருக்கிறோம் என போலந்தின் தேசிய காவல் தலைமையகத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
யூத எதிர்ப்புத் தாக்குதல்
பெர்லினின் பிராண்டன்பர்க் வாயிலில் நடைபெறும் நிகழ்வில் சிட்னியின் போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனையும் இடம்பெறும். குறித்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 16 என அதிகரித்துள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகள் இதை இலக்கு வைக்கப்பட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளனர். ஜேர்மனி நீண்ட காலமாக யூதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் சிறப்புப் பொறுப்புணர்வு கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இதனை Staatsraeson என அழைக்கின்றனர்.

பெர்லினில் ஜெப ஆலயங்கள் மற்றும் பிற யூத நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழக்கமாக உள்ளன, ஆனால் ஹனுக்கா காலத்திற்கு இவை அதிகரிக்கப்படும் என்று ஒரு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஹனுக்கா கொண்டாட்டத்தை குறிப்பிட்டு லண்டனின் பெருநகர காவல்துறையும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகக் கூறியது, ஆனால் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துள்ளது.
இதனிடையே, டிசம்பர் 14 முதல் 22 வரையிலான காலகட்டத்தில் யூத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரான்சின் உள்விவகார அமைச்சர் லாரன்ட் நுனேஸ் உள்ளூர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதாக அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |