'காஷ்மீர் விவகாரத்தில் தலையிட எங்களுக்கு உரிமை உண்டு' வெளிவரும் தாலிபான்களின் உண்மை முகம்!
காஷ்மீர் உட்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தாலிபான்கள் ஆட்சியில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை நடத்த ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படுமோ? என இந்தியா கவலை தெரிவித்துவரும் நிலையில், தாலிபான்களின் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக போரை நடத்தும் திட்டம் இல்லை என தாலிபான்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பிரபல ஊடகத்திற்கு நேர்காணல் அளித்த தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் (Suhail Shaheen), "ஒரு இஸ்லாமியராக காஷ்மீர், இந்தியா மட்டுமல்ல உலகில் எந்த நாட்டிலும் உள்ள இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.
இஸ்லாமியர்கள் உங்களுடைய மக்கள் என குரல் கொடுப்போம். உங்களின் சட்டத்தின்படி அவர்களுக்கும் சமமான உரிமைகள் உண்டு" என்றார்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தாலிபான்கள் வெளியிட்ட கருத்துக்கும் இப்போதைய கருத்துக்கும் பெரிய முரண் உள்ளது.
முன்னதாக, "காஷ்மீர் இருநாடுகள் சம்மந்தப்பட்ட உள்நாட்டு பிரச்சனை, அதில் எங்கள் தலையீடு இருக்காது" என தாலிபான்கள் தெரிவித்திருந்தனர்.
அதேபோல், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி (Arindam Bagchi) வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
தாலிபான் பிரதிநிதி ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் (Sher Mohammad Abbas Stanekzai) கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலை செவ்வாய்கிழமை தோஹாவில் சந்தித்து பேசினார். தாலிபான்களுடன் மேற்கொள்ளப்படும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும்.
அப்போதுக்கூட, இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் பயன்பட்டுவிடக்கூடாது என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.