ஆக்லாந்தில் இலங்கையர் முன்னெடுத்த தாக்குதல்... துப்பாக்கி சத்தமும் கேட்டதாக கூறிய பெண்
நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில், திடீரென முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் இலங்கையர் என்பதும், பொலிசாரின் துரித நடவடிக்கையால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ள நிலையில், தாக்குதல் சம்பவம் நடந்த வேளையில் LynnMall மருந்தகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டு கண்காணிப்பில் இருந்துள்ளார் Aanya Divekar என்பவர்.
அப்போது திடீரென்று அந்த பல்பொருள் அங்காடிக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அனைவரும் பீதியடைந்து மருந்தகத்திற்குள் புகுந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் தமக்கும் பீதி தொற்றிக்கொண்டதாகவும், ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், மிகவும் அமைதியாக மருந்தகத்திற்குள் நுழைந்ததாக Aanya Divekar தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த மருந்தகம் மூடப்பட்டு, உள்ளிருந்த அறைக்குள் அனைவரும் பதுங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருந்ததகத்தினுள் புகுந்த மக்கள் பாதுகாப்பாக பதுங்கிக்கொண்டதாகவும், சுமார் 7 நிமிடங்கள் அவரையில் அங்கே மூச்சையடக்கி காத்திருந்ததாகவும் கூறும் Aanya Divekar,
அங்கிருந்தவர்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் பொலிசார் வந்து தங்கள் அனைவரையும் பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மருந்தகத்தில் பச்சிளம் குழந்தை ஒருவருடன், நாங்கள் 7 பேர்கள் இருந்தோம் என Aanya Divekar தெரிவித்துள்ளார்.
நியூ லின் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் Waitākere மருத்துவமனையிலும், இன்னொருவர் Middlemore மருத்துவமனையிலும், மற்றொருவர் ஆக்லாந்து நகர மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை முன்னெடுத்த இலங்கையர் தொடர்பில் பாதுகாப்பு காரணங்களுக்காக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
மட்டுமின்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்தும் ரகசியம் காக்கப்படுகிறது.