ஐரோப்பாவில் வெப்ப அலைக்கு பதிவான இறப்பு எண்ணிக்கை: வெளியான பகீர் அறிக்கை
ஐரோப்பாவில் கடந்த 2022ல் வெப்ப அலை காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கையை ஐ.நா வெளியிட்டுள்ளது.
வறட்சி, வெள்ளம், வெப்ப அலை
வெப்ப அலை தொடர்பாக ஐரோப்பாவில் 2022ல் மட்டும் 15,700 பேர்கள் மரணமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும், ஐரோப்பா முழுவதும் கடந்த 2022ல் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்கள் தொடர்ந்து அதிகரித்தது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் இந்தியா உட்பட ஒவ்வொரு கண்டம் மற்றும் தேசத்தில் உள்ள சமூகங்களையும் பாதித்தது மற்றும் பல பில்லியன் டொலர்கள் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022ல், கிழக்கு ஆபிரிக்காவில் தொடர்ச்சியான வறட்சி, பாகிஸ்தானில் வரலாறு காணாத மழைப்பொழிவு மற்றும் சீனா மற்றும் ஐரோப்பாவில் பதிவான வெப்ப அலைகள் மில்லியன் கணக்கான மக்களை பாதித்தன.
இதனால் உணவுப் பாதுகாப்பின்மையைத் தூண்டியது, வெகுஜன இடம்பெயர்வுகளை அதிகரித்தது மற்றும் பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு மற்றும் சேதம் ஏற்படுத்தியது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடையில் அதிக உயிரிழப்பு
பொதுவாக ஐரோப்பாவில் பல்வேறு வெப்ப அலைகள் ஏற்படுவதுண்டு. ஆனால் கோடையில் ஏற்படும் வெப்ப அலையானது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்றே கண்டறியப்பட்டுள்ளது.
கோடை காலத்தில், ஸ்பெயினில் சுமார் 4,600 பேர், ஜேர்மனியில் 4,500 பேர், இங்கிலாந்தில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 2,800 பேர், பிரான்சில் 2,800 பேர் மற்றும் போர்ச்சுகலில் 1,000 பேர் மரணமடைந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
2022 ஜூலை மத்தியில் ஐரோப்பாவில் மிகவும் கடுமையான வெப்ப அலை வீசியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.