அச்சுறுத்தும் ஆயுதங்களுடன் மாயமான ஆபத்தான நபர்: நடுக்கத்தில் முக்கிய ஐரோப்பிய நாடு
பெல்ஜியத்தில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் ராணுவ வீரர் ஒருவர் மாயமான நிலையில், அவரை தேடும் பணி நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பெயர் வெளியிடப்படாத அந்த நபர், நாட்டின் பிரதான கொரோனா தொற்று நிபுணர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன், பலரையும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அந்த நபர் ராக்கெட் லாஞ்சர், மெஷின் கன் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காணப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த ஆயுதங்களை தமது ராணுவ முகாமில் இருந்து திருடியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மிக ஆபத்தானவர் என குறிப்பிட்டுள்ள நீதித்துறை அமைச்சர், அவர் தொடர்பில் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த மாத துவக்கத்தில் பெல்ஜியத்தின் முக்கிய தொற்றுநோயியல் நிபுணரான Marc Van Ranst என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த மிரட்டலுக்கு தாம் அஞ்சப்போவதில்லை என தெரிவித்திருந்த Marc Van Ranst, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிரான கும்பலால் இதுபோன்ற மிரட்டல் மட்டுமே விடுக்க முடியும் என்றார்.
இருப்பினும், Marc Van Ranst மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு அந்த நபர் பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் ஒன்றை பொலிசார் கைவிடப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.
இந்த நிலையில், அந்த நபர் தற்கொலை செய்து கொள்ளவோ, அல்லது திடீரென்று தாக்குதலில் இறங்கவோ வாய்ப்பிருப்பதாக பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.