அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி.. மீண்டும் தென் மாவட்டங்களில் கொட்ட போகும் கனமழை
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மீண்டும் சில மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொட்டி தீர்த்த கனமழை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாதிப்படைந்து மிகவும் சிரமப்பட்டனர்.வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்று எந்தெந்த மாவட்டங்கள்?
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27-ம் திகதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் கூறியிருந்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |