பொதுமக்களுக்கு விலக்கு... சாலைகள் மூடப்பட்டு அபராதம் விதிப்பு: ஐக்கிய அமீரகத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் எவரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன மழை, ஆலங்கட்டி மழை
ஐக்கிய அரபு அமீரகத்தில் வார இறுதி நாட்களில் கன மழையும் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வார இறுதியில் பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்படுகிறது.
ஞாயிறன்று மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் இந்த எச்சரிக்கை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8 வெள்ளிக்கிழமை மாலை முதல் மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீசுவதால் சாலைகளில் தெரிவுநிலை குறைவாக இருக்கலாம். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை வானிலை மிக மோசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,000 திர்ஹாம் வரையில் அபராதம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தஃப்ரா மற்றும் அல் ஐன் பகுதிகளில் இருந்து தொடங்கும் இந்த மோசமான வானிலை அபுதாபி மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு விரிவடையும் என்றே கூறப்படுகிறது. அத்துடன் துபாய் உட்பட ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், புஜைரா மற்றும் ராஸ் அல் கைமாவைத் தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், வீட்டிலேயே இருக்கவும் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.
மழை வேளையில் பள்ளத்தாக்குகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் மற்றும் அணைகளுக்கு அருகில் கூடுவோருக்கு 1,000 திர்ஹாம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றும் வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் எச்சரிக்கையை மீறி செல்வோருக்கு 2,000 திர்ஹாம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |