உக்ரைன் எல்லையிலுள்ள ரஷ்ய ஆயுதக்கிடங்கை சுற்றி வரும் ஹெலிகொப்டர்கள்... திடீரென பற்றிய தீ: தொடரும் மர்மம்
உக்ரைன் எல்லைக்கருகில் அமைந்துள்ள ரஷ்ய ஆயுதக்கிடங்கு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே, உக்ரைன் எல்லைக்கருகில் அமைந்துள்ள ரஷ்ய கிராமங்கள் சிலவற்றில் அவ்வப்போது மர்மமான முறையில் திடீர் திடீரென வெடி விபத்துக்களும், தீ விபத்துக்களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
கடந்த மாதம் Belgorod என்ற இடத்தில் அமைந்துள்ள எண்ணெய்க்கிடங்கு ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிய, உக்ரைன், ஹெலிகொப்டர் மூலம் அதைத் தாக்கியதாக ரஷ்யா குற்றம் சாட்ட, உக்ரைன் மறுக்க, இதே நிலை தொடர்கிறது.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷ்ய இராணுவ அமைப்பு ஒன்றின் ஆயுதக் கிடங்கு ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது.
அதைத் தொடர்ந்து வெடிச்சத்தமும் கேட்ட நிலையில், தீயால் அந்த ஆயுதக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த விபத்தில் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அப்பகுதி ஆளுநரான Vyacheslav Gladkov ஒப்புக்கொண்டுள்ளார்.
இப்போதைக்கு அந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆனால், வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், சம்பந்தப்பட்ட பகுதியை இரண்டு ஹெலிகொப்டர்கள் சுற்றிச் சுற்றி வருவதையும், அதைத் தொடர்ந்து, அந்த ஆயுதக்கிடங்கிலிருந்து கரும்புகை எழுவதையும் காணலாம்.