பொறுப்பேற்கும் முன்னரே கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர்: இரகசியமாக முடித்த இஸ்ரேல்
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட்ட புதிய தலைவரும் பொறுப்பேற்கும் முன்னர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
அவர் கொல்லப்பட்டுள்ளது உறுதி
ஹிஸ்புல்லா படைகளின் புதிய தலைவர் தொடர்பில் இதுவரை தகவலேதும் வெளியாகாத நிலையில், அவர் கொல்லப்பட்டுள்ளது உறுதி என்றே கூறப்படுகிறது.
தென்மேற்கு லெபனானில் தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்கிய இஸ்ரேல், ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் ஹாஷிம் சஃபிதீன் தொடர்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா தலைவராக ஹசன் நஸ்ரல்லா பொறுப்பில் இருக்கும் போதே, அடுத்த தலைவராக அடையாளம் காணப்பட்டவர் ஹாஷிம் சஃபிதீன். இந்த நிலையில் கடந்த வாரம் பெய்ரூடில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவார காலமாக ஹாஷிம் சஃபிதீன் தொடர்பில் தகவல் ஏதும் இல்லை என்பதுடன், பொதுவெளியிலும் அவர் காணப்படவில்லை. செப்டம்பர் 27ம் திகதி ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், ஹிஸ்புல்லா படைகளின் துணை பொதுச்செயலாளர் நைம் காசிம் என்பவருடன் இணைந்து சஃபிதீன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.
ஹிஸ்புல்லா படைகளில் முக்கிய பொறுப்பில் சஃபிதீன் இருந்து வந்ததாலையே இஸ்ரேலின் முதன்மையான இலக்காக அவர் அடையாளம் காணப்பட்டார். ஆனால் சஃபிதீன் கொல்லப்பட்டுள்ளதை ஹிஸ்புல்லா படைகள் இதுவரை உறுதி செய்யவில்லை.
நபி முகமதுவின் வம்சாவளி
தலைமை இல்லாத ஒரு அமைப்பாக ஹிஸ்புல்லா தற்போது உள்ளது என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளார், அவருக்கு பதிலாக பொறுப்புக்கு வரவேண்டியவரும் கொல்லப்பட்டுள்ளார் என்றார்.
நஸ்ரல்லாவைப் போலவே, சஃபிதீனும் மதகுருவாக செயல்பட்டு வந்தார். மட்டுமின்றி இஸ்லாத்தின் நபி முகமதுவின் வம்சாவளியைக் குறிக்கும் வகையில் கருப்பு தலைப்பாகை அணிந்து காணப்பட்டார்.
கடந்த 2020ல் ஈராக் தலைநகரில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் படுகொலை செய்த ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி என்பவரின் மகளை ஹிஸ்புல்லா தலைவர் சஃபிதீனின் மகன் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.
மேலும், ஹாஷிம் சஃபிதீனின் சகோதரர் ஒருவர் தெஹ்ரானில் ஹிஸ்புல்லாவின் பிரதிநிதியாக பணியாற்றுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |