அதிக விசா கட்டணங்கள்... பிரித்தானியாவை புறக்கணிக்கும் சர்வதேச விஞ்ஞானிகள், பொறியாளர்கள்
பிரித்தானியாவில் அதிக விசா கட்டணங்களால் சர்வதேச விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் என பலர் வாய்ப்புகளை இழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதகமாக அமையும்
மற்ற முன்னணி அறிவியல் ஆதரவு நாடுகளின் சராசரியை விட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பிரித்தானியா குடியேற்ற கட்டணம் 17 மடங்கு அதிகமாக இருப்பதாக ராயல் சொசைட்டியின் அறிவியல் அகாடமி கூறுகிறது.
மேலும், அதிகக் கட்டணங்களால் பிரித்தானியாவில் உலகளாவிய திறமையாளர்களை பணியமர்த்துவதை கடினமாக்குவதாக ராயல் சொசைட்டி, விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, ஜனாதிபதி ட்ரம்ப் ஆராய்ச்சி நிதியைக் குறைத்ததைத் தொடர்ந்து அமெரிக்காவை விட்டு வெளியேறக்கூடிய விஞ்ஞானிகளை ஈர்க்கும் முயற்சிகளையும் முன்னெடுக்க முடியாமல் போவதாக தெரிவிக்கின்றனர்.
இப்படியான வாய்ப்புகளை பிரித்தானியா இழக்கும் என்றால், அது நமது வரும் தலைமுறைக்கு பாதகமாக அமையும் என்றே விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்த அரசாங்கங்கள் சாதனை நிகர இடம்பெயர்வைக் குறைப்பதாக உறுதியளித்து வந்ததால், பிரித்தானியாவில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் விசாக்களுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவின் குடிவரவு சுகாதார கூடுதல் கட்டணம் (IHS) கடந்த ஆண்டு 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதிரியான விவகாரங்களால், நம்மிடம் உள்ள விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சரியும் என்றும் எச்சரிக்கின்றனர்.
மூன்றில் ஒரு பங்கு
பிரித்தானியா தற்போது வழக்கமான ஐந்து வருட skilled worker விசாவிற்கு 12,120 பவுண்டுகள் வசூலிக்கிறது - இது 2021 ஐ விட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகமாகும். இதில் ஒரு துணை மற்றும் இரு பிள்ளைகள் என்றால், விசா கட்டணம் 30,000 பவுண்டுகளை எட்டும் என்றே கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட அறிவியல் ஆதரவு 18 நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரித்தானியாவின் Global Talent விசா கட்டணமானது மிக மிக அதிகம் என்றே ராயல் சொசைட்டி குறிப்பிடுகிறது.
பிரித்தானியாவின் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் குடியேற்றக் கட்டணமாக 700,000 பவுண்டுகள் செலவிடுவதாக மதிப்பிடுகிறது - இந்தப் பணத்தை புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தலாம் என்று அது கூறுகிறது.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் பொறியியல் பணிகளுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ஒரு வருடம் முன்பு இதே காலகட்டத்தை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளன.
கடந்த ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அறிக்கை ஒன்றில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்ட 934,000 காலியிடங்களில், சுமார் 46 சதவீதம் STEM தொடர்பான துறைகளில் இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |