காபூலில் இருந்து உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டதா? வெளியான அதிரடி பின்னணி
ஆப்கானிஸ்தானில் இருந்து சொந்த நாட்டு மக்களை மீட்டுச் செல்ல வந்த உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டதாக வெளியான தகவலின் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.
காபூலில் இருந்து உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டதாக முதலில் தகவலை வெளியிட்டது ரஷ்ய செய்தி ஊடகம் என தெரிய வந்துள்ளது. விமானம் கடத்தப்பட்டு ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டதாக உக்ரேனிய அமைச்சர் கூறிய குற்றச்சாட்டை குறித்த செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
ஆனால் அந்த செய்தி வெளியாகும் முன்னரே, உக்ரேனிய விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் உள்ளூர் நேரப்படி பகல் 11.30 மணியளவில் உக்ரேனிய விமானம் காபூல் நகரில் இருந்து ஈராணுக்கு புறப்பட்டு சென்றது.
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்த விமானம் மதியம் 1.07 மணிக்கு ஈரான் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. காபூலில் இருந்து தேவையான எரிபொருள் கிடைக்காத நிலையில் ஈரானில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பியுள்ளனர்.
மட்டுமின்றி, ஈரான் விமான நிலையத்தில் யாரும் இறங்கவில்லை எனவும், விமானத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் நேரிடவில்லை எனவும் ஈரானில் இருந்தும் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் இருந்து 5.56 மணிக்கு புறப்பட்ட குறித்த விமானம் இரவு 9.09 மணிக்கு கீவில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.