தமிழ்நாட்டில் நாக்கில் தேன் தடவுவது.. டெல்லியில் நஞ்சைப் பரப்புவது! மு.க.ஸ்டாலின் விளாசல்
இந்தி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா பேச்சு
நேற்று நடைபெற்ற மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், அனைத்து மாநில மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே நாடு வலுவடையும் எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர்,"இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டி அல்ல. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதை நாம் சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ ஏற்காமல் நமது முயற்சியின் மூலம் ஏற்க வேண்டும்" என அவர் பேசியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் கண்டனம்
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,"எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.
I strongly denounce Union Home Minister @AmitShah's audacious push for Hindi acceptance. It's a blatant attempt to subjugate non-Hindi speakers. Tamil Nadu rejects any form of Hindi hegemony and imposition. Our language and heritage define us – we won't be enslaved by Hindi!… pic.twitter.com/gNiJ2TGtKm
— M.K.Stalin (@mkstalin) August 5, 2023
தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்.
இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |