இந்து கோவில்கள், கடைகள் மீது தாக்குதல்; 10 பேர் அதிரடி கைது
வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் குல்னா (Khulna) மாவட்டத்தில் 4 இந்து கோவில்கள் மீது, கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு, ஷியாலி (Shiali) கிராமத்தில் வசித்து வந்த இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதாள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் ஒருதரப்பினர் முதலில் ஷியாலி பகுதியில் இருந்த (Shiali Mahasmashan temple) கோவில் மீது தாக்குதல் நடத்தி சிலைகளை சேதப்படுத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஷியாலி புர்பாரா பகுதியில் இருந்த ஹரி மற்றும் துர்கா கோவில்களையும் சேதப்படுத்தியதாக, உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் இந்துக்களின் ஒருசில கடைகள் மற்றும் இரு வீடுகளும் சேதப்படுத்தப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த மோதலில் 4 கோவில்களில் இருந்த 10 சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் கூடுதலாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.