ஹொங்ஹொங்கை உலுக்கிய கோர தீ விபத்தில் 40 கடந்த பலி எண்ணிக்கை... மூவர் கைது
ஹொங்ஹொங்கில் அடுக்கு மாடி குடியிருப்பு வளாகம் தீ விபத்தில் சிக்கிய சம்பவத்தில் இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44 என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் மாயம்
உலகம் மொத்தம் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், நெருப்பு இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்லது.

இதனிடையே, இந்த கோர சம்பவத்திற்கு காரணம் என சந்தேகிக்கப்படும் மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது. கடந்த பல வருடங்களுக்குப் பிறகு ஹொங்ஹொங் நகரத்தில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவே கூறப்படுகிறது.
இதனால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. 2,000 குடியிருப்புகளைக் கொண்ட எட்டு அடுக்குமாடி கட்டிட வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் தொடங்கிய தீ, சீன நிதி மையமான ஹொங்ஹொங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தீ விபத்தில் சிக்கிய பகுதி உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட மற்றும் மிக உயரமான குடியிருப்புத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இதனிடையே, அதிகாலையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தீயணைப்புத் துறையினர் இறப்பு எண்ணிக்கையை 36 லிருந்து 44 ஆக உயர்த்தினர். இந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக மனிதக் கொலை சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால், அவர்கள் மூவரும் கைதானதன் பின்னணி குறித்து பொலிஸ் தரப்பில் இருந்து விளக்கமளிக்கவில்லை. தீ விபத்திற்கு காரணம் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மூங்கில் சாரக்கட்டுகளில் ஏற்பட்ட தீ என்றே கூறுகின்றனர்.
பலர் வயதானவர்கள்
இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், தீ விபத்து நடந்த இடத்தில் எரியும் மூங்கிலில் இருந்து உரத்த வெடிப்பு சத்தங்களைக் கேட்டதாக கூறப்படுகிறது.

கட்டிடங்களில் இருந்து அடர்த்தியான புகை மூட்டங்கள் கிளம்புவதையும், தீப்பிழம்புகளும் சாம்பலும் வானத்தை நோக்கி உயர்ந்து வருவதையும் பத்திரிகையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, யுயென் என்ற குடும்பப்பெயர் கொண்ட 65 வயதான ஒருவர், அந்த வளாகத்தில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வசித்து வருவதாகவும், தனது அண்டை வீட்டாரில் பலர் வயதானவர்கள் என்றும், அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டிருக்கலாம் என கலக்கத்துடன் கூறியுள்ளார்.

பராமரிப்பு வேலைகள் நடப்பதால், ஜன்னல்களை சிலர் மூடியுள்ளனர். இதனால், தீ விபத்து குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை என்றும், அலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்ததாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தை அடுத்து, 900 பேர்களுக்கு மேல், தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே, தீ விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |