2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு வழங்கும் ஹாங்காங்
hong kong reward bonus tax free for rise birth rate: குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க 2வது குழந்தை பெற்றால் ரூ.3.6 லட்சம் பரிசு, வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
2வது குழந்தை பெற்றால் ரூ.3.5 லட்சம்
உலக நாடுகள் குழந்தை பிறப்பு விகித சரிவை எதிர்கொண்டு வரும் சூழலில், இளம் தலைமுறையினரை விட முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நாடுகளும் ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

தற்போது இந்த ஊக்கத்தொகை திட்டத்தை நீட்டித்துள்ள ஹாங்காங், ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தகுதியுள்ள பெற்றோருக்கு 20,000 ஹாங்காங் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 2.44 லட்சம்) வழங்கப்பட்டு வந்தது.
இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16, 2026 மற்றும் அக்டோபர் 24, 2029 க்கு இடையில் ஹாங்காங்கில் பிறக்கும் இரண்டாவது அல்லது அதற்குப் பிறகான ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2வது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைக்கு, 30,000 ஹாங்காங் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 3.66 லட்சம்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கிற்கு வெளியே பிறக்கும் குழந்தைக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பெற்றோரில் ஒருவர் ஹாங்காங்கில் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
வரி விலக்கு
மேலும், அத்தகைய குழந்தைகளுக்கான வரி விலக்கு 1,40,000 ஹாங்காங் டொலரிலிருந்து 1,60,000 ஹாங்காங் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.19.55 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பும், 2 வருடங்களுக்குப் பிறகும் சொத்துக்களை வாங்கும் குடும்பங்களுக்கு ரூ.2.5 லட்சம் என்ற உச்சவரம்புடன் முத்திரைக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
வீட்டு உரிமைத் திட்டத்தின் (HOS) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட வெள்ளை படிவக் குடும்ப விண்ணப்பதாரர்களின், முன்பணச் சுமையைக் குறைக்கும் வகையில் அடமானக் கடன் மதிப்பு விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் இந்த குழந்தை ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்திய நிலையில் 2024 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 35,723 ஆக உயர்ந்தது.
ஆனால், 2025 ஆம் ஆண்டில் 31,000க்கும் சற்று அதிகமாக ஆக குறைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 19,255 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைவாகும்.