வீடியோ அழைப்பில் வசமாக சிக்கிய 59 பேர்கள்... பல ஆயிரம் டொலர்களை இழக்க வைத்த சம்பவம்
கடந்த சில நாட்களில் மோசடி ஒன்றில் வசமாக சிக்கி நான்கு பெண்கள் உட்பட 59 ஹொங்ஹொங் நாட்டவர்கள் பல ஆயிரம் டொலர்களை இழந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆண்களையும் விட்டுவைக்கவில்லை
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், குறித்த மோசடியானது பொதுவாக மிரட்டி பணம் பறிப்பவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். பெண்களை பொதுவாக குறிவைக்கும் இந்த குழு, ஆண்களையும் விட்டுவைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
வீடியோ அழைப்பில் உரையாடலின் நடுவே, ஆடைகளை களையவைத்து, அதை ரகசியமாக பதிவு செய்து பின்னர் மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்றே பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
சில சந்தர்ப்பங்களில், மோசடியாளர்கள் சமூக ஊடகங்களில் பெண்களைக் குறிவைக்க வசீகரமான, அதிக வருமானம் கொண்ட, படித்த ஆண்களாகவும் காட்டுகிறார்கள்.
அவர்கள் நம்பிக்கையைப் பெற முகஸ்துதி மற்றும் இனிமையான பேச்சைப் பயன்படுத்துகிறார்கள், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட நலன்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் சிக்க வைக்கிறார்கள்.
244,430 டொலர் தொகை
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுபோன்ற 59 வீடியோ அழைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதில், 244,430 அமெரிக்க டொலர் தொகையை பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 1,102 பேர்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 20 சதவிகிதம் பேர்கள் மாணவர்கள் எனவும் தெரிவித்துள்ள பொலிசார், சுமார் 31 மில்லியன் ஹொங்ஹொங் டொலர்களை பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும், இதுபோன்ற வழக்குகளின் என்ணிக்கை அதிகரித்து வருவதாகவே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் மோசடிகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 6,000 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |