ஒரே இரவில் உடல் கருகி பலியான 50 பேர்கள்... கொரோனா மருத்துவமனையில் கோர சம்பவம்
ஈராக்கில் கொரோனா மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 50 பேர்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக்கின் தெற்கு நகரமான நசீரியாவில் உள்ள அல்-ஹுசைன் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பெரும் போராட்டத்திற்கு பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்துக்கான முதன்மை காரணம் வெளியாகவில்லை என்றாலும், ஆக்ஸிஜன் தொட்டி ஒன்று வெடித்தபின் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே இரவில் 50கும் மேற்பட்டவர்கள் உடல் கருகி பலியான நிலையில், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, மருத்துவமனையின் தலைமை நிர்வாகியை கைது செய்ய பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், பொலிஸ் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு முன்னர் அல் ஹுசைன் மருத்துவமனையில் 70 படுக்கைகள் கொண்ட இந்த புதிய கொரோனா வார்ட் ஒன்று நிறுவப்பட்டது.
தற்போது தீ விபத்தின் போது குறைந்தபட்சம் 63 நோயாளிகள் அங்கே இருந்திருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பாக்தாதில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 82 நோயாளிகள் உடல் கருகி பலியாகினர்.
நீண்ட கால போரினால் சிதைந்து போயுள்ள ஈராக்கில் இதுவரை 1.4 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17,000 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மொத்தமுள்ள 40 மில்லியன் குடிமக்களில் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.