ஏமனில் ராணுவ முகாம் மீது ஹவுதி படையினர் தாக்குதல்: கொல்லப்பட்ட 53 அரசு படையினர்
Houthis Strike on Yemen Army Camp 53 dead: ஏமனில் ராணுவ முகாம் மீது ஹவுதி படையினர் நடத்திய தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ராணுவ முகாம் மீது தாக்குதல்
திங்கட்கிழமை ஏமனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 50 அரசு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-அலம் ராணுவ பயிற்சி மையம் மீது 3 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஹவுதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஏமன் அரசு படையில் புதிதாக சேர்க்கப்பட்ட 200 இளம் வீரர்கள் ராணுவ முகாமில் இருந்த நிலையில் இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்த நிலையில், நீண்ட நேரம் நீடித்த மீட்பு பணிகளுக்கு பிறகு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்தது.
ஏமனின் மாகாண அதிகாரிகளை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த திடீர் தாக்குதல் காரணமாக உள்ளூர் மருத்துவமனை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.