94 பேர் பலியான ஹாங்காங் தீ விபத்து - விபத்திற்கு இதுதான் காரணமா?
94 பேர் பலியான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஹாங்காங் தீ விபத்து
ஹாங்காங்கின் டய் போ பகுதியில் உள்ள வாங் பக் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது.

இதில் 31 மாடிகளை கொண்ட 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மொத்தமாக சுமார் 4800 பேர் அங்கு வசித்து வந்துள்ளனர்.
1983 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த 26 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மதியம் 2:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
பராமரிப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட மூங்கில் சாரங்கள் மூலம் முழு குடியிருப்பு வளாகத்திற்கும் தீ பரவியது. நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில், தற்போது வரை தீயணைப்பு வீரர்கள் உட்பட 94 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 76 பேர் காயமடைந்துள்ளனர். 300க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பராமரிப்பு பணி மேற்கொள்ளும் நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம்
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர், சாரத்தின் மீது அமர்ந்து கொண்டு புகை பிடித்து விட்டு, சிகரெட் துண்டை கீழே போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Shocking new footage reveals workers were caught casually smoking while repairing the outer wall of Wang Fu Court, Tai Po in Hong Kong, moments before the entire building went up in flames pic.twitter.com/TWNu4gk65V
— Surajit (@surajit_ghosh2) November 27, 2025
தீ பற்ற தொடங்கியதற்கு இது ஒரு காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேவேளையில், சாரத்திற்காக மூங்கில் கம்புகள் மற்றும் அதனை சுற்றி பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்டைரோஃபோம் என்னும் பாலிஸ்டிரீன் நுரைதாள்களும் தீ விரைவாக பரவியதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
பேக்கேஜிங் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிற இந்த பாலிஸ்டிரீன் நுரைதாள், குறைவான வெப்ப நிலையிலும் தீ பற்றி, விரைவாக பரவ செய்யக்கூடியது ஆகும். மேலும், இது பற்றி எரியும் போது ஆபத்தான நச்சு வாயுவை வெளியிடுகிறது.

தீ விபத்து நிகழ்ந்த போது அதிகளவில் காற்று வீசியதால், இது தீயை மற்ற கட்டிடங்களுக்கு பரவ காரணமாக அமைந்துள்ளது.
பலரும், ஜன்னல் கதவுகளை மூடியிருந்ததால் தீ விபத்து ஏற்பட்டதே பலருக்கு தெரியவில்லை.
தொலைபேசியில் அழைத்து சிலருக்கு தீ விபத்து குறித்து தெரிவித்த போது, தங்கள் கட்டிடத்திற்கு தீ பரவாது என்ற நம்பிக்கையில் வெளியேறாமல் உள்ளே இருந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |